சென்னை
குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் அபய பரத்வாஜ் ஒருவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியில் உள்ளார். இவருக்குக் கடந்த ஆகஸ்ட் 31 அன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையான பண்டிட் தீன்தயாள் உபத்யாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்ததால் செப்டம்பர் 15 அன்று வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். ஆயினும் அவர் நிலை மேலும் சீர்கெட்டது. இதையடுத்து அவர் சென்னைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிர் இழந்தார்.
பிரதமர் மோடி, “குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அபய் பரத்வாஜ் ஒரு திறமையான வழக்கறிஞர் ஆவார். அவர் சமுதாய சேவையில் முன்னணியில் நின்றுள்ளார். தேசிய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட ஒரு தலைவரை நாம் இழந்துள்ளது சோகத்தை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.