கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் 27 ம் பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் என்ற நிதியத்தைத் தொடங்கினார்.

இதில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் நன்கொடை அளித்தனர்.

ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இந்நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்க வேண்டும், பிஎம் கேர்ஸ் நிதியைத் தணிக்கை செய்து அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும்.

பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்பட நன்கொடைகள் மற்றும் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சம்யக் அகர்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

பி எம் கேர்ஸ் தொடர்பாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கையும் சேர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது, டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி அமித் பன்சால் ஆகியோர் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

பிரதமர் அலுவலக இணை செயலாளர் அளித்திருந்த பிரமாண பத்திரத்தில் கூறியிருந்ததாவது :

பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை, எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்தின் நிதியும் அல்ல.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடையை மட்டுமே பிஎம் கேர்ஸ் நிதி பெறுகிறது. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை, மத்திய அரசின் எந்த விவகாரத்துக்கும், செயலிலும் ஒரு பகுதியாக பிஎம் கேர்ஸ் நிதி இல்லை.

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் அலுவலகம் கவுரவ அடிப்படையில் செயல்படுகிறது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையாகவும், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரையின் பெயரில் தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படுகிறது.

இணையதளத்தில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையும், நிதி பெறப்பட்ட விவரங்களும் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதிலளித்திருக்கிறது.