திருச்சி: தமிழகத்தில்கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது பிளஸ்2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உயர்படிப்புக்கு பிளஸ்2 தேர்வு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால், அதை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தொற்று பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்..? என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக நடைபெறும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மாநில அரசே பிளஸ் டூ பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.