சென்னை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பிளஸ்2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ்1  பொதுத்தேர்வு இன்று தொடங்கு கிறது.

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கான தேதிகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில்,  அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 5) தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வின் முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்காக,  மாநிலம் முழுவதும்  3,316  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார்  8.23 லட்சம் மாணவ மாணவிகள்  எழுதுகின்றனர். இதில் 7,557 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 18,369 மாணவர்கள், 4,755 தனித் தேர்வர்கள் மற்றும் 137 கைதிகளும் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சுமார் 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.