சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில்,  மாணவிகள் 93.64 சதவீதம், மாணவர்கள், 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  மறுகூட்டலுக்கும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

நாளை முதல்  26-ந்தேதி வரை  மாணவ மாணவிகள்  தாங்கள் பயின்ற பள்ளிக்குச சென்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

அதுபோல,   வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.