வடசேரி: தஞ்சையில் பிளஸ்1 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த மாணவி படித்த அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தஞ்சையில் அரசு பள்ளியில் படித்த பிளஸ்1 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் மாணவி ஒருவர், வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப்  பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்தார். சம்பவத்தன்று இவர் பள்ளியில் இருந்து இடையிலேயே வீட்டுக்கு வந்ததாகவும்,  வீட்டில் தூக்கு மாட்டி  தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவி, முற்பகல் 11:30 மணி அளவில் திடீரென வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மாணவி வகுப்பில் இல்லாததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள், அதே பள்ளியில் படிக்கும் அவரது சகோதரனிடம், வீட்டுக்கு சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுவன், அங்கு  மாணவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். சிறுவனின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து, இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாநாடு போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பள்ளியில் பணியாற்றி வரும், ஆங்கில ஆசிரியர் கணேசன், மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து வீட்டுக்கு செந்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து ஆங்கில ஆசிரியர் கணேசனை (31) பாப்பநாடு போலீசார் கைது செய்தனர். இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.