பெங்களூரு:

ர்நாடக மாநில சட்டமன்றத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த 18ந்தேதி முதல் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வாக்கெடுப்பை வரும் 24ந்தேதி (புதன்கிழமை) நடத்துமாறு சட்டமன்ற சபாநாயகருக்கு முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் கடந்த 18ந்தேதி  தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 19தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக கவர்னர், முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகருக்கும்  உத்தரவிட்ட நிலையில், விவாதங்கள் முடிந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று சபாநாயகர் ரமேஷ் கறாராக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபை கடந்த 19ந்தேதி மாலையுடன் ஒத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது. இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதன் காரணமாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு முதலமைச்சர் குமாரசாமி உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கர்நாடக மாநில விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில்,  இன்றே வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று   சுயேச்சை எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தை நாடினார். ஆனால், அவர்கள் வழக்கை இன்று விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், கர்நாடக சட்டமன்றம் இன்று நடைபெற்று வருகிறது.

சபையில் பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு வரும் 24ந்தேதி நடத்தலாம் என்றும், அதுவரை தனக்கு அவகாசம் வழங்கும்படியும்  சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுபோல, நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த வேண்டும் என்று, சபாநாயகர் ரமேஷ்குமாரிடம்,  சட்ட அமைச்சர் கிருஷ்ண பைர கவுடா கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் காரணமாக சபை பரபரப்பாக காணப்படுகிறது. இன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.