சென்னை
நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 27,397 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 13,51,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15,412 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 11,96,549 பேர் குணம் அடைந்து 1,39,401 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நாளை (10/05/21) முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்துகிறது.
இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரையில்,
“கொரோனா தொற்றே இனி இல்லை என்கின்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கவே தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது. கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுப்பது – கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களை முழுமையாக மீட்பது ஆகிய 2 குறிக்கோள்களைத் தமிழக அரசு முன்னெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல் அலையை விட கொரோனா வைரஸ் மோசமாக உருமாறியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதித்து வருகிறது இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்குள் நுரையீரலை அதிகமாகப் பாதிக்கிறது.
முதலில் வேறு ஏதாவது நோய்ப் பாதிப்பு இருக்கிறவர்களுடைய மரணம் அதிகமாக இருந்த நிலைமை மாறி, வேறு நோய்ப் பாதிப்புகளே இல்லாதவர்களும் தற்போது அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்
வட மாநிலங்களில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வரும் தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக உள்ளது. தமிழகம் அந்தளவிற்கு மோசம் அடையவில்லை என்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
தினசரி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த 2 வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படி அதிகமானால், நோயைக் கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும் என அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஊரடங்குக் கட்டுப்பாடுகளைப் போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகிறது. இதனால், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஊரடங்கு அறிவிக்கவில்லை என்றால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமானதாக ஆகிவிடும்.
இதை உணர்ந்து அருகில் உள்ள கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த 14 நாட்களும் நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை மனதில் வைத்து, மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும். பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும். சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவருடைய ஆலோசனையைப் பெறுங்கள், பயம் மட்டும் வேண்டாம். இது குணப்படுத்தக்கூடிய நோய் தான்.
இது கஷ்டமான காலம் தான். அதேநேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல. நோய் நாடி, அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்தி விடலாம்.
அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நீங்கள் எல்லோரும் நடந்துகொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் “
எனத் தெரிவித்துள்ளார்.