சென்னை:

பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி, வடிகட்டிய பொய் என்று தமிழ்நாடு  அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் டி. துளசிங்கம் நம்மிடம் தெரிவித்ததாவது:

“ஒரு கிலோ மட்டமான  பிளாஸ்டிக் கழிவின் விலையே 150 முதல்  200 ரூபாய். இதில்தான்  குடம், பொம்மை, சேர் எல்லாம் செய்ய முடியும். இதில் அரிசி செய்து விற்றால் அடக்க விலையே 250ருபாய்க்கு மேல வந்துவிடும்.

ஆனால் நாம்  சாப்பிடுற உயர்ரக பிரியாணி (பாசுமதி வகை) அரிசியோட விலையே 100ருபாய் தான்.

250ருபாய்க்கு தயாரிச்சு 100ருபாய்க்கு விற்க சீனாக்காரன் முட்டாள் இல்லை.

தவிர பிளாஸ்டிக் அரிசி என்று ஒன்று இருந்தால் அதை தண்ணீரில் ஊற வைக்க முடியுமா? அதை வேக வைத்து  சோறாக உண்ண முடியுமா?

வத்தி குச்சியில் இருக்கும் சிறு அளவிலான மெழுகு குச்சியை சில சமயங்களில் குழந்தைகள் சாப்பிட்டு, அது வயிற்றில் கோளாறை ஏற்படுத்தி மருத்துவரிடம் சிகிச்சை பெறும் செய்திகளை அறிந்திருப்போம். இப்படி இருக்கையில் பிளாஸ்டிக்கை உண்டால் நமது உடல் என்ன ஆகும்?

இதையெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.

ஆகவே பிளாஸ்டிக் அரிசி என்பது வடிகட்டிய பொய். முழு அளவிலான வதந்தி.

இதுபோன்ற வதந்தி பரவுவதற்கு நமது மக்களின் மன நிலையும் முக்கிய காரணம்.

ஈமு கோழியால் கோடி கோடியாக லாபம் கிடைக்கும் என்று யாராவது கிளப்பி விட்டால், அதையும் நம்பி பணத்தைக் கொட்டுகிறார்கள். பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று பொய் தகவல் பரவினால் அதையும் நம்புகிறார்கள்.

துளசிங்கம்

எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து பார்த்து ஏற்பதோ, நிராகரிப்பதோதான் சரி. அந்த மனநிலைக்கு மக்கள் வர வேண்டும்” என்ற துளசிங்கம் மேலும் தெரிவித்ததாவது:

“ப்ளாஸ்டிக்  அரிசி என்ற பெயரில் சில நாடுகளில் ஒருவித அரிசி அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். வீணாகிப்போன கிழங்கு வகைகளை காய வைத்து மாவாக்கி அதில் இருந்து  அரிசி போல செய்வது.

உதாரணமாக, சில  சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுகளில்  Rice ball’s,Rice meat ball’s, chowmein எல்லாம் இந்த மாதிரி அரிசியில செய்வது உண்டு. 1960ம் ஆண்டு வாக்கில் சீன பகுதிகளில்  இந்த வகை அரிசிகள் பயன்பாட்டில் இருந்தன.

ஒரு கிலோ கிழங்கை மசிச்சு காய வைதது இதுபோன்ற அரிசி (போல) செய்வதற்கு 12ல்   இருந்து 1  ரூபாய் தான் ஆகும். இது போல இந்தியாவில் எங்கும் தயாரிக்கப்படுவது இல்லை. ஆகவே ஒரு வார்த்தைக்காக பிளாஸ்டிக் அரிசி என்பது கூட இந்தியாவில் கிடையாது” என்றார் துளசிங்கம்.

 

அவரிடம் அரிசி மில்களில்  கூலி வேலை செய்ய கொத்தடிமைகளாக பலர் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வருவது குறித்து கேட்டோம்.

அதற்கு அவர், “அது போன்ற செய்திகள் அனைத்தும் பொய். தனியார் தொண்டு நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். உரிய ஊதியம் கொடுத்தே மில்களில் ஆட்களை பணியமர்த்துகின்றோம்” என்றார்.

மேலும் அவர், இன்று மாலை பிளாஸ்டிக் அரசி வதந்தி குறித்து விளக்க, தங்களது சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.