டெல்லி: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, மற்றொரு புறம், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், உலக  நாடுகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மனித ரத்தத்தில் சில மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள், மற்றொரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் மனித நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக  ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது,  மனித ரத்தத்தில் 5 வகையான பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்காக 22 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 77 விழுக்காட்டினரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் உள்ளது.

அனைத்து வகையான உணவுப்பொருட்களும் பிளாஸ்டிக் கவர்களால் பேக் செய்யப்படுவதாலும், உணவு, தண்ணீர், காற்று ஆகியவற்றில் பிளாஸ்டிக் மென்துகள்கள் கலந்திருப்பதாகவும், நாம் சுவாசிக்கும் போதும், உணவுகளை உட்கொள்ளும் போதும் நமது உடலுக்குள் சென்று உறுப்புகளின் மீது படிவதாகவும், பின்னர் ரத்தத்தில் கலப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், இதன் காரணமாக ஏற்படும் பேரழிவை நினைத்தால், பயங்கரமாக இருக்கும் என்பதை மறக்க முடியாது, சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகம் இல்லாத ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருந்தால், பிளாஸ்டிக் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களை நினைத்தால், பதபதைப்புதான் ஏற்படுகிறது.

இந்தியாவில் என்னதான் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும், மத்திய, மாநில அரசுகள், அதை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டுவதால், பிளாஸ்டிக் உபயோகம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மக்களிடையே நாகரிகம்  வளர, வளர பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதே பேஷனாக மாறிவிட்ட நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களும், உணவகங்களில் உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்படும், அதை சாப்பிடும் மக்களிடையே தாக்கத்தை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது. நமது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

இந்த அதிர்ச்சி தகவல் அடங்குவதற்குள் மனிதர்களின் நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹல் பல்கலைக்கழகம் மற்றும் ஹல் யோர்க் மருத்துவப் பள்ளியின் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்  நுரையீரலின் ஆழமான பகுதியில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றுப்பாதைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இது சாத்தியமற்றது என்றே முன்பு கருதப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளது தொடர்பான ஆய்வில், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட 13 நோயாளிகளிடமிருந்து அகற்றப்பட்ட திசுக்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 11 பேரின் நுரையீரல்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பொதுவாகக் காணப்படும் துகள்கள் பாலிப்ரொப்பிலீன் ஆகும். இது பிளாஸ்டிக் பேக்கேஜிங், PET பாட்டில்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“நுரையீரலின் கீழ் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான துகள்கள் இருக்ககூடும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நுரையீரலின் கீழ் பகுதிகளில் காற்றுப்பாதைகள் சிறியதாக இருப்பதால், எவ்வாறு பிளாஸ்டிக் துகள்கள் சென்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆசிரியரும் இங்கிலாந்தில் உள்ள ஹல் யார்க் மருத்துவப் பள்ளியின் லாரா சடோஃப்ஸ்கி, தி கார்டியன் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது மனிதர்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது விரைவில் தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.

இந்த  நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாயம், மனிதர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துஇருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளது.

இதுதொடர்பான ஆய்வறிக்கை அளிக்கும்படி மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.