சென்னை:
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்று முதல் (ஜனவரி 1, 2019) தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், இன்று முதல் அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள், சென்னை கோயம்பேடு, பிராட்வேயில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பை, கண்ணாடி தம்ளர், வாழை இலை, தையல் இலை, பனை ஓலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடைக்கு பல இடங்களில் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து துணிப்பைகள் போன்றவற்றை உபயோகித்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் பனை ஓலையில் முனையப்பட்ட பெட்டிகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. அதுபோல டீக்கடைகளில் பார்சல் டீ, காபி போன்றவை கவர்களில் அடைக்கப்படுவதற்கு பதிலாக சிறிய எவர்சில்வரிலான தூக்குகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் கோயம்பேடு, பிராட்வேயில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கிலோ தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கடைக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த கட்டமாக அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்..