திருவனந்தபுரம்

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட COVID-19 ஐ குணப்படுத்த கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சை  முறை பின்பற்றப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. 

‘ஸ்ரீ சித்ரா திருநல் இன்ஸ்டிடியூட் ஃபார்  மெடிக்கல் சயின்ஸ் & டெக்னாலஜி’ இல் இதற்கான முதல் மருத்துவ சோதனை நடைபெற உள்ளது.

மேலும் ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் இந்த பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. திருவனந்தபுரம்,  ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர். கொரோனா சிகிச்சையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் கோழிக்கோடு மருத்துவமனையும் இதில் அடங்கும்.

இது தொடர்பாக ஆய்வு நிகழ்த்த கேரள அரசு, குருதியியல் மற்றும் குருதி மாற்று மருத்துவத் துறை உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ‘கேரள மருந்து நடவடிக்கை குழு’  வை அமைத்துள்ளது.

அதன் முதன்மை நிபுணர்களான மருத்துவர் ஆஷா கிஷோர், மருத்துவர் அனூப்குமார் இருவரும் கூட்டாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

“48 முதல் 72 மணி நேரத்திற்குள் பிளாஸ்மா மாற்று சிகிச்சையில் குணம் கிடைக்கும்.  சீனா,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சோதனை முயற்சியாக சிறிய அளவில்  இச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அலுவலர் (Drug Controller general of India) ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த சிகிச்சை  தொடங்கப்படும்” என்றனர்.

மேலும் இச்சிகிச்சை முறை குறித்து  விரிவான விளக்கங்களை அளித்தனர். “பிளாஸ்மா தெரபி  என்பது, COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தோரின்  ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் செலுத்துவது. இந்த பிளாஸ்மா சிகிச்சையானது Covid-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே செலுத்தப்படும்.

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தோரின் ரத்தத்தை இரண்டு முறை சோதனைக்கு உட்படுத்தி தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பே இரத்தம் எடுக்கப்படும்.

மேலும் எலிசா, ஹெப்படைடிஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அவை மட்டும் பாதிக்கப்பட்டோரின் உடலில் செலுத்தப்படும். இரத்தம் மீண்டும் கொடையாளிக்கே செலுத்தப்படும். இந்த மருந்துவ சோதனை குறித்த முழுமையான முடிவுகளை தற்போது உறுதியாக கூறமுடியாது” எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா தொற்றாளர்களுக்கு ‘பிளாஸ்மா தெரபி’ சிகிச்சை மேற்கொள்ள உள்ள முதல் மாநிலம் கேரளமே ஆகும்.