சென்னை: சென்னையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பலரும் நாய் கடிகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சதாரணமாக, தெருக்களில் நடந்து செல்பவர்களைக்கூட தெருநாய்கள் கடித்து வைத்து விடுகிறது. இதனால், நாய்களை பலர் கொல்ல முற்படுகின்றனர். ஆனால், அதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், நாய்கள் அதிகரிப்பு தடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், பல பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தெருநாய்களுக்கு பயந்து , பீதியுடன் நடமாடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளை நாய்கள் கடிப்பதும் சமீப காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாய் கடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றால் போதிய அளவில் மருந்துகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் ஆண்டுக்கு 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் தீட்டி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில், கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து, அதற்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்டுக்கு 24000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ஆண்டு 27ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டுஉள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி, தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் , நாட்டில் முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும்.
புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனஎன்றவர், சென்னை மாநகராட்சி சார்பில், வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளனர்.