குவஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் பாம்புக் கடி மருந்துகள் மற்றும் ரத்தம் ஆகியவற்றை டிரோன்கள் மூலம் எளிதில் அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் பாம்புக் கடியால் இறந்தோரின் எண்ணிக்கை 1770. இறந்தோரின் எண்ணிக்கை மேகாலயா மற்றும் திரிபுராவில்தான் அதிகம். அந்த இருமாநிலங்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை தலா 404.
மூன்றாமிடத்தில் வருவது அஸ்ஸாம். அங்கு மரித்தோரின் எண்ணிக்கை 265. நான்காவது இடம் வகிக்கும் சிக்கிமில் இறந்தோர் 242. வடகிழக்கு மாநிலங்களில் பாம்புக் கடித்தால் பலரும் இறந்து போவதற்கு காரணம், அங்கு விஷ முறிவு மருந்துகள் மருத்துவமனையில் இல்லாமைதான் முக்கிய காரணம்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் வாழும் மொத்தம் 4 கோடி மக்களுக்கும் அங்கே இருப்பில் இருக்கும் விஷ முறிவு மருந்தின் அளவு வெறும் 0.004% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான், எளிதில் அணுகமுடியாத பகுதிகளுக்கு, விஷ முறிவு மருந்து மற்றும் ரத்தம் ஆகியவற்றை டிரோன் மூலம் அனுப்பிவைத்து மக்களைக் காக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக சில ஏஜென்சிகளின் அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது.
சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியலுக்கான வடகிழக்குப் பிராந்திய இந்திரா காந்தி கல்வி நிறுவனம் மற்றும் வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.