இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ. / CII) ஆண்டு விழாக் கூட்டத்திற்கு வீடியோ பதிவு அனுப்பியிருந்த அமைச்சர் பியூஸ் கோயல் இந்திய நிறுவனங்கள் தேச நலனுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மத்திய தொழில்துறை அமைச்சரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை தனது யூடியூபில் வெளியட்ட சி.ஐ.ஐ. சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கியுள்ளது.

மத்திய அமைச்சரின் இந்த பதிவு குறித்து கேள்வியெழுப்பியுள்ள ‘தி இந்து’ நாளிதழ் நாட்டின் மிகப் பெறும் நிறுவனமான டாடா குழுமத்தை குறிப்பிட்டு பியூஸ் கோயல் பேசியிருப்பதாகவும், இந்த வீடியோ பதிப்பின் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

19 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ பதிவில், பியூஸ் கோயல் பேசி இருப்பதாவது :

நீங்கள் ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியிருக்கலாம், ஆனால் தேச நலன் குறைந்து அந்நிய நிறுவனங்களில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளது, இதை நான் ஏற்கனவே டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளேன்.

நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாமல் பத்து பைசா லாபம் இருந்தால் கூட போதும் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்றனர், பின்னர் அரசிடம் வந்து அதற்கான வரியில் சலுகை கேட்டு அலைகின்றனர்.

உங்களால் முடிந்தால் உங்கள் தயாரிப்புகளை ஜப்பானிலோ, கொரியாவிலோ விற்க முடியுமா ? முடியாது, அவர்கள் தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், இந்திய தயாரிப்புகளை வாங்கமாட்டார்கள்.

தேச உணர்வு பற்றி நாங்கள் பேசினால், எங்களைப் பிற்போக்கு வாதிகள் விமர்சிக்கின்றனர், ஜப்பானிலோ கொரியாவிலோ அப்படி நினைப்பதில்லை.

என்று பியூஸ் கோயல் பேசி இருக்கிறார், சி.ஐ.ஐ. கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர்கள் தொழில் துறையினர் மீது அரசுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவது என்பது சகஜமான ஒன்று என்ற போதும், இதுவரை எந்த ஒரு நிறுவனத்தையும் யாரும் நேரடியாக விமர்சித்தது இல்லை.

பியூஸ் கோயலின் இந்த பேச்சு குறித்து டாடா நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், “இந்திய நிறுவனங்கள் குறித்த பியூஸ் கோயலின் பேச்சு என்னை திடுக்கிட வைக்கிறது. இது ஏதோ தெரியாமல் பேசியது அல்ல, தாம் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்தே பேசி இருக்கிறார், இது அவரது ஆட்சித் தலைமையின் எண்ணத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.” என்று விமர்சித்திருக்கிறார்.

நாட்டின் முன்னோடி நிறுவனமான டாடா நிறுவனம் குறித்து அமைச்சரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் வைரலாகப் பேசப் படுகிறது, அம்பானி அதானி போன்ற நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் அரசு, டாடா போன்ற நிறுவனங்களை பொதுவெளியில் நேரடியாகவே விமர்சிக்கும் நிலையில் அவர்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.