ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருக்கு சில ‘நல்ல செய்திகளை’ ட்வீட் செய்துள்ளார். பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு இரயில் நிறுத்து நிலையத்தை அறிமுகப்படுத்துவதாக ட்விட்டர் கணக்கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அறிவிப்புடன் வெளியிடப்பட்டிருந்த வீடியோ இந்தி மொழியில் இருந்ததால் கன்னட டிவிட்டர் பயனர்கள் மத்தியில் அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோபமடைந்த நெட்டிசன்கள் பலரும் அமைச்சரின் டிவிட்டர் செய்தியிலேயே தங்களது எதிர்வினையை தெரிவித்தவன்னமுளனர். ஏற்கனவே மத்திய அரசு இந்தியை தென்மாநிலங்களில் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை உள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயல் கன்னடர்களுக்கு மத்தில் மேலும் கோபத்தை தூண்டியுள்ளது. மேலும் பலரும் மொழி தெரியாத தங்களை மத்திய அரசு ஒதுக்குவதாக கூறியுள்ளனர்.
“பெங்களூரு மக்களுக்கு இந்திய ரயில்வேயின் பரிசு: மக்களின் பல ஆண்டு கால வேண்டுகோளை பூர்த்தி செய்யும் வகையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு நிறுத்து நிலையம் நிறுவப்படுகிறது” என்று பியூஷ் கோயல் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இதை பலரும் “இந்தி திணிப்பு” என்றும் “உள்ளூர் மொழியான கன்னடத்தில் ஏதும் பற்றாக்குறையா?” எனவும் கேள்வி எழுபியுள்ளனர். கர்நாடகாவின் தலைநகரில், கன்னடத்தில் வீடியோ வெளியிட மனமில்லை எனில், ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கலாமே என சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனோ அமைச்சரும் இந்தியில் மட்டுமே (இந்தி வீடியோவில் இந்தி சப்-டைட்டிலுடன்?) வீடியோவை தேர்வு செய்திருந்தார்.
அதனுடன், மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குவதும் அதை பரிசாக அழைப்பதும் அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் என்றும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கனிமொழி, பி.சிதம்பரம் போன்ற அரசியல் தலைவர்கள் இந்தி தெரியாததால் தாங்கள் அடிக்கடி “அவதூறுகளை” எதிர்கொண்டதாகக் கூறியதை அடுத்து, பிற மொழிகளின் மீது இந்தியை வைத்து ஆதிக்கம் செலுத்தும் இச்செயல் கண்டிக்கத்தக்கது என கருத்து பரவலாக எழுந்துள்ளது.