சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையின் விலை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் மருத்துவமனைகளில், கொரோனாவிற்கு அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இதையடுத்து, மருத்துவமனையின் வசதிக்கேற்ப, கட்டணம் நிர்ணயித்து, ஓரிரு நாட்களில், அரசு அறிவிப்பு வெளியிடும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனைக்கு, 4,500 ரூபாய், மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.அந்த ஆய்வகங்களில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 2,500 ரூபாய் என்ற கட்டணத்தில், பரிசோதனை செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.