லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை படம் பிடித்த புகைப்பட்ட கலைஞர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதற்கு சதி திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2 ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க லக்னோ மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக பாபர் மசூதியை இடித்தபோது அவற்றை படம் பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் ‘தி பயனியர்’ இதழ் புகைப்படக்காரர் பிரவீன் ஜெயின் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

பின்னர் இது தொடர்பாக ஜெயின் கூறுகையில், ‘‘2 நாட்கள் முன்னதாகவே நான் அயோத்தி சென்றுவிட்டேன். 5ம் தேதி நடந்த வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு விஹெச்பி தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கு நடந்த நிகழ்வை பார்த்து கரசேவகர்கள் வெறும் பூஜையை மட்டும் நடத்தமாட்டார்கள்.

அவர் மசூதியையும் இடிப்பார்கள் என்று நான் சக பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்களிடம் தெரிவித்தேன். அப்போது இதை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிரித்தார்கள். மறுநாள் காலை அது நடந்துவிட்டது. மசூதிகளில் காவி கொடி ஏற்றப்பட்டது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டில் முடிவடைந்த இது தொடர்பான வழக்கு விசாரணையில் நான் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தேன்’’ என்றார்.

இவரைதவிர இந்துஸ்தான் டைம்ஸ் சஞ்சய் சர்மா, பிரசாந்த் பஞ்சியரும் ஏற்கனவே சாட்சியமளித்துள்ளனர். மேலும், சண்டே மேகசின் நிதின் ராய் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.