சென்னை: வாக்குச்சாவடி முகவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், 2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் தேர்தல் முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் அளித்த வாக்குச்சாவடி முகவருக்கான அடையாள அட்டையுடன், மத்திய , மாநில அரசுகளின் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவர்களின் அடையாளத்தை உறுதி செய்யவே இந்த புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.