பெய்ஜிங்,
அமெரிக்காவுடன் உள்ள நடப்பை முறித்து, சீனாவுடன் உறவு கொள்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்து உள்ளார்.
சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, பிலிப்பைன்ஸ் இனி பெய்ஜிங்கை உதவிக்காக நாடும் என கூறினார்.
பிலிப்பைன்சின் தெற்கிலிருந்து முதன்முதலாக அதிபர் பதவிக்கு வந்துள்ள டுடெர்டோ, அங்குள்ள இஸ்லாமி யர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் போராளிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி உள்ளார்.
பல வருடங்களாக அங்கு நடைபெற்று வரும் வன்முறைகளில் சுமார் 1,50,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
புதிய அதிபராக அவர் பதவிக்கு வந்ததில் இருந்து சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் தொடர்பாக அவரது நிர்வாகம் தொடுத்து வரும் வன்முறைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா பிலிப்பைன்ஸ் இடையே ஆன உறவு மிகவும் மோசமடைய தொடங்கியது.
இதற்கிடையில் அதிபர் ஒபாமா பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டோவுடன் கடந்த வாரம் நடத்தவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நான்கு நாள் பயணமாக சீனா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர், தியனன்மென் சதுக்கத்தில் சீன அதிபர் சீ ஜின்பிங்கைத் டுட்டர்ட்டே சந்தித்தார்.
அப்போது, இருநாட்டு தலைவர்களும், இரு நாட்டுக்கு இடையிலான நம்பிக்கை, நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர்.இந்த சந்திப்பை வரலாற்று சிறப்புமிக்கது என டுட்டர்ட்டே பாராட்டியிருக்கிறார்.
சீன அதிபருடன் நடைபெற்ற சந்திப்பில் இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் வர்த்தகம், உள்ளமைப்பு வசதிகள், வேளாண்மை போன்ற துறைகளுக்கான 13 உடன்பாடுகள் கையெழுத்தாகின.
அதன்பிறகு நடைபெற்ற பிலிப்பினோ மற்றும் சீனா தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ,
ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட அனைத்திலும் இருந்து அமெரிக்காவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் பிரிந்துவிட்டது என்பதை நான் அறிவிக்கிறேன் என அதிரடியாக கூறினார்.
பிலிப்பைன்ஸ் அதிபரின் கருத்துக்களால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் குழப்பம் அடைந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்பி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸ் இதுவரை அதிகாரபூர்வமான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தனது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து பிரியும் நேரம் வந்துவிட்டது என அந்நாட்டு அதிபர் அறிவித்திருப்பது குறித்து அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபர் சமீப காலங்களாக அமெரிக்காவையும் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் தாக்கி பேசி வருவது குறிப்பிடதக்கது.