சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கனவே தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி சோதனை செய்து வரும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 3வது கட்ட சோதனையை தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியின் மனித சோதனைகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை 2 கட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், நல்ல பலனை தருவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து, 3வது கட்டமாக மனித சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு நாடு முழுவதும இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு  உள்ளது.  அதில், டெல்லி எய்ம்ஸ், தமிழகத்தில் எஸ்.ஆர்.எம். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (26ந்தேதி)3வது கட்ட  சோதனை  தொடங்கி உள்ளது.  முதலாவது தடுப்பூசியை அந்த மருத்துவமனையின் நரம்பியல் மையத் தலைவரான எம்.வி.பத்மா ஸ்ரீவாஸ்தவா செலுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுதது,  எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் 3வது கட்ட சோதனை தொடங்க உள்ளது. இதுகுறித்துகூறிய கல்லூரி முதல்வர் சுந்தரம்,  முதற்கட்ட பரிசோதனையில் 18 வயது முதல் 55 வயது வரையிலான தன்னார்வலர்கள் உடலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் நலமாக இருந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. அதன் படி, அடுத்த கட்டமாக 12 வயது முதல் 65 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையும் வெற்றி அடைந்துள்ளது.

இதையடுத்து, 3ம் கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இந்த சோதனை  அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும்,  சுமார் 1000 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.