டில்லி
முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது.
கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 96 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் தடுப்பூசி இந்தியாவுக்கு உடனடித் தேவையாக உள்ளது. இந்தியாவில் தயாராகி வரும் தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன.
அமெரிக்காவின் பிஃபி|ஸர் மற்றும் ஜெர்மனியின் பயோண்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90% திறனுள்ளது எனச் சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்குப் பிரிட்டன் மற்றும் பெஜ்ரைன் ஆகிய நாடுகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளன. கடந்த புதன் கிழமை அன்று இந்த அனுமதி கிடைத்ததையொட்டி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரும் முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் இந்த மருந்தின் சோதனை முடிவுகளை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகு இதை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி அளிப்பார் என கூறப்படுகிறது.
இந்த தடுப்பூசி சோதனை இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை என்பதால் சோதனை இன்றி அனுமதி வழங்க வேண்டும் என நிறுவனம் தனது கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் சோதனை நடத்தி ஒப்புதல் பெறாத தடுப்பூசியை விற்கவும் பயனுக்கு அளிக்கவும் மருந்து கட்டுப்பாளரின் அனுமதி தேவையாகும். இந்திய மருந்துகள் விதி 2019ன் படி இதற்கான முடிவை கட்டுப்பாட்டாளர் 90 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
இந்த மருந்து மிகவும் குளிர்ந்த நிலையில் அதாவது மைனஸ் 70 டிகிரி வெப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதால் இந்தியாவில் இந்த மருந்தை பாதுகாத்து வைக்கச் சாத்தியம் இருக்காது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய குளிர் நிலையில் இதை உற்பத்தி சாலையில் இருந்து எடுத்து வந்து அளிப்பதற்குப் போக்குவரத்து செலவு மிகவும் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.