ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஷைன் குமார் (35) ராணுவ வீரரான இவர் ராஜாஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.
விடுமுறைக்காக கொல்லம் வந்த ஷைன் குமார் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் முன் தனது நண்பரைப் பார்க்க நேற்று முன்தினம் கடக்கல் பகுதிக்குச் சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத 6 நபர்கள் அவரை சூழ்ந்துகொண்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவரை தாக்கி அவரது சட்டையைக் கிழித்ததுடன் தனது முதுகில் கீறியதை அடுத்து தனது நண்பர் ஜோஷி என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.
அவரது நண்பர் வந்து பார்த்தபோது அவரது ஷைன் குமார் முதுகில் PFI (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) என்று எழுதியதைப் பார்த்து இருவரும் சென்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
எழுத்துமூலம் ஷைன் குமார் அளித்த புகாரை ஏற்றுக்கொண்டு சம்பவம் குறித்து ஷைன் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவர் முதுகில் எழுதப் பயன்பட்ட பெயிண்ட் மற்றும் பிரஷ் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
பின்னர் அதை அவர்கள் இருவருமாக சேர்ந்து வாங்கியதை உறுதிப்படுத்திய போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதற்குள்ளாக இந்த சம்பவம் குறித்து பாஜக-வினருக்கு தெரியவந்ததை அடுத்து காவல் நிலையம் முன் குவியத் துவங்கியதோடு ராணுவ வீரரை தாக்கி அவரது முதுகில் PFI என்று எழுதிய விவகாரம் தேசிய அளவில் ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில், ராணுவ வீரர் ஷைன் குமாரின் நண்பர் ஜோஷி இதை தான் தான் எழுதினேன் என்றும் குடிபோதையில் இருந்த இருவரும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.