டெல்லி: 5ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும், பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம் என்ற வேளாண் பல்கலைகழகம் சார்பில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட நிதின் கட்கரி சிறப்புரை ஆற்றினார். அப்போது, பச்சை ஹைட்ரஜன், எத்தோனல் மற்றும் பிற பசுமை எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான வலுவான சுருதியை உருவாகி வருவதாகவும், இதனால், அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நாட்டிலிருந்து பெட்ரோல் மறைந்துவிடும் என்று முழு நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். உங்கள் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் பச்சை ஹைட்ரஜன், எத்தனால் ஃப்ளெக்ஸ் எரிபொருள், சிஎன்ஜி அல்லது எல்என்ஜியில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்ட்ராவின் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுவதாகவும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் சிஎன்ஜி மூலம் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓடும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பச்சை ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம் என்றும், இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாய வளர்ச்சியை 12 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் கட்காரி வேண்டுகோள் விடுப்பதாகவும், மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துடன் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஏற்கனவே மத்தியஅரசு, அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.