சென்னை: பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள  கழிப்பறைகள் பொதுமக்களுக்கானது அல்ல என சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  பெட்ரோல் நிலையங்கள் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

 பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள்,  பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பெட்ரோல் நிலைய கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க  உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  விசாரணையின்போது, பெட்ரோல் பங்குகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள்  பொது மக்கள் பயன்படுத்துவதால் கழிப்பறைகளின் பராமரிப்பு பாதிக்கப்படுவதாகவும், இது பெட்ரோல் நிலையங்களுக்கு நிதிச்சுமையாக உள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, கூறிய  நீதிமன்றம், “பெட்ரோல் நிலையங்கள் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவை தனியார் உடமைகள், அவற்றின் வசதிகள் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே,” என்று தெளிவுபடுத்தியது.

மேலும், பொது மக்களுக்காக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் அரசு பொது கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த உத்தரவு, பெட்ரோல் நிலையங்களில் கழிப்பறை பயன்பாடு தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு முடிவு கட்டுவதாக உள்ளது.

பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இந்த உத்தரவை வரவேற்றுள்ளது. “பொது மக்கள் பயன்படுத்துவதால் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கூடுதல் செலவு ஏற்படுகிறது. இது எங்கள் வணிகத்தை பாதிக்கிறது,” என்று சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த உத்தரவு பயணிகள் மற்றும் பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது,

அது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பு, பொது கழிப்பறைகளின் பராமரிப்பு மற்றும் அணுகல் குறித்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “அரசு, பொது இடங்களில் போதுமான கழிப்பறைகளை அமைத்து, அவற்றை தரமாக பராமரிக்க வேண்டும்,” என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.