விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை 100 ரூபாயை கடக்கும் நாள். தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு ஒரு வேலை இந்த 100 இலக்கெல்லையை சில காலம் தள்ளிப்போடலாம். ஆனால், தமிழக மக்கள் அனைவரும், இதை எதிர்நோக்கியே இருக்கின்றனர்.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 2 -வது பெரிய மாநிலமாக உள்ள தமிழகம், அதன் வருவாயை உற்பத்தி துறை மற்றும் சேவைத்துறையில் இருந்து மட்டும் தோரயமாக 87 % பெறுகின்றது. இது ஏனைய மாநிலங்களின் வருவாயில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. ஆனால், பெட்ரோலிய பொருட்களின் கடுமையான விலையேற்றம், இத்துறைகளை கடுமையாக பாதிக்கும். தமிழகம், 60 % நகரங்களைக் கொண்ட பகுதி. அதனால், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பெட்ரோலிய விலை பொருட்களின் தாக்கம் அதிகம். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை நீடித்தாலும், தமிழகத்தில் அதன் தாக்கம் தீவிரமானது.
பிரதமர் மோடி அவர்களின் ஏழைகளுக்கான பிரதான் மந்திரி உஜ்ஜவால யோஜனா (Pradhan Mandhri Ujjwala Yojana (PMUY )) திட்டத்தின் மூலம் நாடு முழுக்க கொடுக்கப்பட்ட 8 கோடி குடும்பத்திற்கான எரிபொருள் விநியோகம், சில மாநிலங்களில் 99 % வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தொடராமல் இருப்பதில் இருந்தே நாட்டில், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றதின் பாதிப்பை உணர முடியும்.
பின்னர், இதே திட்டத்தை 14 .2 கிலோ எடை சிலிண்டரில் இருந்து 5 கிலோ சிலிண்டராக குறைத்து பார்த்தும், திட்டம் வெற்றிபெற முடியவில்லை. நாட்டு மக்களின் வாங்கும் திறனை இது கட்டியம் இட்டு தேசத்திற்கு பறைசாற்றுகிறது. இம்மக்களுக்கு பெட்ரோலிய விலை ஏற்றம் என்பது தலைக்கு மேல் போகும் வெள்ளம் போன்றது, அது ஜான் போனாலும், முழம் போனாலும் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால், அம்மக்களின் ஏக்கமும் இயலாமையும் வாக்கு சீட்டுகளில் பிரதிபலிக்கும்.
அதைவிட பரிதாபத்திற்குரியவர்கள், அதற்கு அடுத்த பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள், பெரும்பாலும் தமிழக சூழலில் உள்ள பொதுமக்கள். அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு பெட்ரோலிய பொருட்கள் இன்றியமையாதது. ஆனார், எரிபொருட்களின் விலையேற்றத்தின் தாக்கம் அவர்களை தாங்கள் அனுபவித்த பல பயன்பாட்டினை தியாகம் செய்து ஈடுசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தின் தாக்கம் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவையாவையும், தாங்கும் நிலையில் சராசரி மக்கள் இல்லை. ஆனால், கொரோனாவிற்கு பிந்தைய சூழலில், இதுபோன்ற விலை உயர்வுகளை எதிர்த்து போராடவும் இயலாத நிலையில் உள்ளார்கள். ஆனால், அவர்களின் உள்ள குரலின் ஓசை எல்லா கடைவீதிகளிலும் எதிரொலிக்கிறது. அது அரசு கட்டிலில் இருப்பவருக்குத்தான் கேட்பதில்லை, அல்லது கேட்டாலும் கேட்காதது போல் உள்ளனர்.
நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீனிவாசன் அவர்கள், பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசாங்கம் தீர்மானிப்பதில்லை என்றார்கள், ஆனால், அமைய விருக்கும் தமிழக அரசாங்கத்தை பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் தீர்மானிக்காமல் விடப்போவதில்லை என்பதை அறிவார்களா?
கட்டுரையாளர்: ராஜ்குமார் மாதவன்.