ராஞ்சி: இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலைகள் சதமடித்துள்ளன. இந்திய வலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த விலையேற்றத்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதுமட்டுமல்லாமல் வரலாற்றிலேயே முதன்முறையாக டீசலும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.
இதையடுத்து தீபாவளி பண்டிகையின்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் மத்தியஅரசு குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்றும் டெல்லியிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் , பெட்ரோல் விலை றைப்பு நடவடிக்கை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாதத்திற்கு அதிகபட்சமாக 10 லிட்டர் வரை மானியம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு வரும் ஜனவரி 26 குடியரசு தினம் அன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் முதல்வர் சோரன் அறிவித்துள்ளார்.
மேலும், இருசக்கர வாகனம் தவிர மற்ற வாகனங்களுக்கு நடைமுறையில் உள்ள விலையின் படியே பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார்.