சென்னை,
தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது, பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் என அறிவித்து உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் வழங்கி வருகின்றனர். அதைக்கொண்டு பெட்ரோல் பங்குகள் சில்லரை வணிகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் மீதான கமிஷன் தொகை போதாது என்றும், கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் போர்க்கொடி தூக்கியது. தங்களது கோரிக்கை நிறைவேறா விட்டால், ‘மே 14-ம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்’ என்று இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்குகளை மூடுவது என டிவு எடுத்துள்ளதாக அதன் தலைவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனால் பலர் முன்கூட்டடியே பங்குகளுக்கு சென்று வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்க தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என தெரிவித்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.