சேலம்: சேலம் அருகே உள்ள எடப்பாடி எடப்பாடி காவல் நிலையத்தின்மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காவல்நிலையம் மீதே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி காவல்நிலையம், சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி, இ -சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் என எப்போதும் பரபரப்பாக செயல்படும் இடமாகும். இந்த பகுதியில், அதிகாலை திடீரென காவல்நிலையத்திற்குள், அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள்கள் விழுந்து வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் , உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்ததுடன், காவல் நிலையத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாதது தெரிய வந்தது. மர்ம நபர்கள் யாரோ பெட்ரோல் குண்டுகளை காவல்நிலையத்திற்கு வீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி ஊரானது தமிழ்நாடு முன்னாள் முதல்வருமை, அதிமுக பொதுச்செயலாளருமா பழனிசாமியின் சொந்த ஊர் . அங்கு எப்போதும் காவல்துறை தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.