சென்னை:

டலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவன தலைவர்  மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலேசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்பட பல  நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் தொழில் தொடங்கினால் அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

அதன்படி, ஆலைகளுக்கு தடையில்லா மின்சாரம், சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் பராமரிப்பு, திறன்மிக்க இளைஞர்கள், சாலை போக்குவரத்து வசதி என அனைத்தும் தமிழகத்தில் கிடைக்கு ம் என்று விவரித்தார். இந்த சுற்றுப் பயணத்தின் போது 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகள் வந்தன. 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டதாககூறப்பட்டது. அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வரின் அழைப்பை ஏற்று சில நிறுவனங்களில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அதன்படி,  தமிழகத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவன தலைவர் மற்றும் அதிகாரிகள்  தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.