டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட அறிவுறுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்தும் விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏப்ரல் 1ந்தேதி அன்று  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்,  இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ஒரு கோயிலை அரசு எடுத்துக்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் இந்து கோயில்களை கொண்டு வர எந்த அதிகாரமும் இல்லை. ஏற்கனவே ஒரு கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கோயிலை அரசு கட்டுப்பாட்டல்இருந்து விடுவித்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இது தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தை சார்ந்த விவகாரம் அல்ல மாறாக ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களையும் சார்ந்த விவகாரம் என கூறினர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் அனைத்து சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் சட்ட விவகாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அவ்வாறு மாநிலங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு எவ்வாறு பிறப்பிக்க முடியும்? என்று கூறியதுடன்,   இந்த விவகாரத்தில் சட்ட பிரச்சனை இருந்தால் உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகி இருக்கலாமே? என்றனர்.

இந்த விவகாரத்திற்காக ஏன் ரிட் மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு சூழலையும் சரியாக ஆராயவும், கையாளவும் உயர் நீதிமன்றத்தால் முடியுமே, எனவே உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள் என அறிவுறுத்தினர்.

இதற்கு  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களும் முன்பு மதராஸ் மாகாணத்தில் இருந்தவை. இந்த மாநிலங்களின் சட்டங்களும் ஒரே மாதிரியானவை.  மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் கோயில் தொடர்பான சட்டங்களையும் எதிர்த்து சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் நூற்றுக்கணக்கான மனுக்கள் போட வேண்டியதிருக்கும். எனவே தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்றனர்.

இதையடுத்து,  இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும். என தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள் எனக்கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் குழு அமைக்க விரும்பினால் உயர் நீதிமன்றம் நிபுணர் குழுவையும் அமைக்கலாம். அது சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு உட்பட்டது எனவும் தெரிவித்து ரிட் மனுவை முடித்து வைத்தனர்.