பெல்லட் கன் (Pellet Gun) பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் முறையீடு
போராட்டக்காரர்களை கலைக்க பெல்லட் கன் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும், பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறும் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யஷோவர்தன் ஆசாத், பிரசாந்த் குமார், ஷேக் இர்ஷாத் மன்சூரி ஆகியோர் வழக்கறிஞர் விருந்தா குரோவர் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில், பம்ப் ஆக்ஷன் ரைபிள் அல்லது புராஜெக்டைல் ஆக்ஷன் கன் (PAG) மூலம் உலோக பெல்லட் குண்டுகளை சுடுவதை தடுக்கவோ அல்லது முழுமையாக தடை செய்யவோ உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
என்ன நடந்தது?
மனுதாரரான பிரசாந்த் குமார் கூறுகையில், ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியில் பங்கேற்றபோது, ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) வீரர்கள் எந்த முன் எச்சரிக்கையும் இன்றி பெல்லட் கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் தாம் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மனுதாரரான ஷேக் இர்ஷாத் மன்சூரி, பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கன்னாட் பிளேஸ் பகுதிக்கு சென்றிருந்தபோது நடந்த பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ளவை
போராட்டக்காரர்களை கலைக்க முதலில் தண்ணீர் பீரங்கி போன்ற மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படவில்லை. போராட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றபோதும், சரணடையும் நிலையில் இருந்தபோதும், ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர்கள் திடீரென பெல்லட் கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்றும், பெல்லட் குண்டுகள் எந்த திசையில் பாயும் என்பதை கட்டுப்படுத்த முடியாததால், அவற்றை பொதுமக்கள் மீது பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெல்லட் கன் பயன்பாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், ஜூலை 20-ம் தேதி நடந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசு சார்பில் உரிய இழப்பீடு, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வசதிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.