சென்னை
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ரொக்கமாக ரூ,. 15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தேதிகள் அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அவ்வாறு நடத்தை விதிகள் அமலில் உள்ள போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அளவுக்கு மேல் ரொக்கப்பணம் எடுத்துச் செல்வது தடை செய்யப்படும்.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது ரூ.,50000க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் போது ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், “அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வாரம் தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளதால் குறைந்தது ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது. எனவே தேர்தல் விதிகள் அமலுக்குப் பிறகு ரூ.15 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.