டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் ரத்து எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், அவர் திமுக ஆட்சியில்மீண்டும் அமைச்சரானதும், புகார்கள் வாபஸ் பெறப்பட்டது. இது சர்ச்சையானது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையின் அறிக்கையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் திமுக உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். அதிமுகவுக்கு தாவி, பதவி சுகத்தை அனுபவித்த செந்தில் பாலாஜி. ஜெ.மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் அமமுகவுக்கு சென்றால், அங்கு போனியாகாத நிலையில் மீண்டும் 2018ம் ஆண்டு டிசம்பரில் திமுகவுக்கு தாவியதுடன், தற்போது திமுக அமைச்சராக வலம் வருகிறார்.
இவர்மீது ஏராளமான குற்றச்சாடுக்கள் உள்ளன. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு போரட்டங்களை நடத்தினார். கரூர் பகுதிகளில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக, ஜே.சி.பி முன்பு படுத்து செந்தில் பாலாஜி நடத்திய போராட்டம் அதிமுக தலைமையின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக செந்தில் பாலாஜி தூக்கிய போர்க்கொடி, போயஸ் கார்டனின் கண்களில் பட்டதால் மாவட்டச் செயலாளர் பதவி பரிசாகக் கிடைத்தது. அத்தோடு ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆதரவுடன் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்தார். .
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது முதல் 4 ஆண்டுகள் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பை அலங்கரித்தவர் செந்தில் பாலாஜி. “முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவைக்கும் அதிகமாக 38,000 பணியாளர்களை அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்ததாகவும், அதனால் தான் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டதாகவும் எடப்பாடி தலைமையிலான ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழலும் தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை நியமித்தது தொடர்பாகவும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கப்பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. 38,000 பணியாளர்களிடம் சராசரியாக ரூ.4 லட்சம் வாங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், ரூ.1520 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக பாமக உள்பட பல கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. ஆனால், அவர்மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்துகளுக்கு ஜி.எஸ்.பி. கருவிகளை வாங்கியதில் முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தன. செந்தில் பாலாஜியின் கரம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வரை நீண்டதாகவும், அதனால் கார்டனின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறு புகார்கள் இவர்மீது அடுக்கப்படுகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை மற்றும் சென்னை மோனோ ரயில் திட்ட சுணக்கம், லாரி உரிமையாளர்கள் பிரச்னை,டிக்கெட் வழங்கும் கையடக்க இயந்திர முறைகேடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டிரைவர், கண்டக்டர் தேர்வு செய்யும் பணியில் முறைகேடுகள் என்று செந்தில் பாலாஜியின் மீதான புகார்கள் நீண்டுகொண்டே போகின்றன.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், கோவில் கோவிலாக சுற்றியதுடன், மோட்டை போட்டும், தீச்சட்டி எடுத்தும், அங்க பிரதட்சனம் செய்தும் அலப்பறை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறைக்கு சென்றதால், அதிமுக எடப்பாடி கையில் சென்றதும், டிடிவி கட்சியில் இணைந்தார். ஆனால், அங்கு போனியாகாததால், வேறு வழியின்றி மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், அவர்மீது பலர் காவல்துறையில் பணமோசடி புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதுபோல சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும், (17.03.2021) கரூர் திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டவுடன் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்’ என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். அதனால், ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்தது. இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் பரவின.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்துக்கு சென்றது. ஒருசில நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், புகார் கொடுத்தவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், அவர்களிடம் பெற்ற தொகையை அமைச்சர் திருப்பி கொடுத்து விட்டதால், அவர்கள் புகார்களை வாபஸ் பெற்றதாக காவல்துறை தெரிவித்தது. இதனால், அவர்மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது விமர்சனங்களை எழுப்பியது. புகார்தாரர்கள் மிரட்டப்பட்டதால், வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டது.
ஒருவர் ஊழல் செய்துவிட்டு, பின்னர் அந்த வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் வழக்கு ரத்து செய்யப்படுவது கேலிக்குரியதாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுகுறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.