சென்னை

லய நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்கள் தாமாகவே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

மாநிலம் எங்கும் பலரும் ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  அவ்வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் ஆலயத்துக்குச் சொந்தமாகச் சென்னை கீழ்ப்பாக்கம் ஈ வெ ரா சாலையில் உள்ள நிலத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாடகை செலுத்தவில்லை.   அறநிலையத்துறை நோட்டிஸ் அனுப்பியும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை இன்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றத் தொடங்கினர்.  இந்த பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துரை ஆணையருடன் நேரில் சென்று பார்வையிட்டார்.  அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.

சேகர்பாபு, “அறநிலையத்துறையைப் பொறுத்தவரை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தயாராக இருக்கிறது. ஏற்கனவே திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ஆலய நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வருமானம் ஈட்டும் முயற்சியை அறநிலை துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. ஆலய நிலங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளில் வாடகை பணம் வசூலிப்பது குறித்து சட்ட ரீதியான முயற்சிகள் நடத்தப்படும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் இந்த நிலத்தில் நிறுவனங்கள் கட்டப்படும்” எனத் தெரிவித்தார்.