அமெரிக்காவின் மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் தேதி இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பென்னட் என்ற நபருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை செய்தனர்.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே முதன்முதலாக இவருக்கு தான் பன்றியின் இதயம் பொறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் மார்ச் 8 ம் தேதி டேவிட் பென்னட் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பார்ட்லே பி. கிரிபித் மற்றும் மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை அறிவித்துள்ளதுடன், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 57 வயதாகும் டேவிட் பென்னட்-டுக்கு இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இறந்துவிடுவார் என கருதப்பட்டதால், இதனை மேற்கொள்ள மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு, அமெரிக்க மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு பரிந்துரை வழங்கியது.

“இது வாழ்வா சாவா என்பதற்கிடையிலான அறுவை சிகிச்சை இது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்ற போதிலும் என்னுடைய இறுதி வாய்ப்பு இது என்பதால், அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தேன்” என்று பென்னட் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், 1997 ம் ஆண்டு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் தானி ராம் பரூவா, ஹாங்காங்-கைச் சேர்ந்த டாக்டர் ஜோனதன் ஹோ கே-ஷிங் என்பவருடன் இணைந்து கூட்டாக மரபணு மாற்றப்பட்ட பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

மாற்று இருதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்ட நபர் ஒரு வாரம் கழித்து நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இறந்து போனார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி இல்லாமல் இயங்கியதாக சோனாபூரில் உள்ள டாக்டர் தானி ராம் பரூவா-வின் தானி ராம் பருவா ஹார்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் அப்ளைடு ஹியூமன் ஜெனடிக் இன்ஜினியரிங் நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவமனை மூடப்பட்டதுடன் டாக்டர் தானி ராமும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.