சென்னை: புதிய படங்களுக்கு தியேட்டர்களில் முதல் ஒருவாரம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், வந்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தினசரி 5 காட்சிகள் வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை மே 16 அன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
