சென்னை: தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அதைத்தொடர்ந்து பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு நூலகத்தை திறந்து வைத்தார்.
பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று ( டிசம்பர் 24ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட வருகிறது. இதையொட்டி, இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம் ஆய்வு மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.