பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை என் அனுமதி இல்லாமல் அட்மின் முகநூலில் பதிவு செய்துவிட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து எச்.ராஜா நேற்று தனது முகநூல் பதிவில், “ லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். .இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை”  என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து எச்.ராஜாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து தனது பதிவை எச்.ராஜா நீக்கினார்.

இதற்கிடையே வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலையை பா.ஜ.கவினர் இருவர் உடைத்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

எச்.ராஜா மீதும் கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒருவரது பூணூல்  அறுக்கப்பட்டது.

இந்த நிலையில் எச்.ராஜா, இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் அட்மின்  என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.

எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.

ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்