பெரியார் முழு உலகத்துக்குமானவர்…

பெரியார் மற்றும் பெண்கள் சிறப்புதின சிறப்பு கட்டுரை

கட்டுரையாளர்:  நளினி ரத்னராஜா, பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், சமூக ஆர்வலர், இலங்கை

பெரியார் ராமசாமி தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் மனித உரிமை, மற்றும் மனிதர்களுக்கிடையேயான சமத்துவம் குறிப்பாக பெண்கள் சமத்துவமான பாரபட்ஷம் இல்லாத சூழலில் வாழ வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திய தலைசிறந்த சிந்தனையாளர் என்பதை எடுத்துகாடட வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

குறிப்பாக, பெரியார் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சமத்துவம், பெண்களின் உரிமைகள், இனப் பாகுபாடு ஒழிப்பு, பகுத்தறிவு, மற்றும் சமூக நீதியை வலியுறுத்திய போதும், ஐ.நா. இந்த ஒப்பந்தங்களை மிகவும் பிந்தைய காலகட்டங்களில் உருவாக்கியது. இது, பெரியாரின் பார்வை எவ்வளவு முன்னேற்றமிக்கதோ, அவரின் சிந்தனைகள் இன்று உலகளாவிய மனித உரிமை பிரகடனங்களுக்கு அடித்தளமாயிருக்கின்றன என்பதற்கும் சான்றாகும்.

இப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர் இந்தியாவில்  பிறந்து வாழ்ந்தார் என்பது தமிழ் மக்களுக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்க்கின்றது என்பதை  அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரியார் கொண்டாடப்பட வேண்டியவர். அவரது கருத்துகள், ஐக்கிய நாடுகள் சபையின் மகளிருக்கு  எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாது  ஒழிப்பதற்கானது (CEDAW) மற்றும் இனவெறி ஒழிப்பு சர்வதேச உடன்படிக்கை (ICERD) ஆகியவற்றின் நோக்கங்களுடன் ஒத்துப்போகின்றன.

இதன் மூலம், பெரியார் பேசியது தமிழர்களுக்காக இந்தியர்களுக்கு இலங்கையர்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கின்றோம் என்பதை இந்த கட்டுரை மூலம் விளக்குகிறேன். இது உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு சம்பவங்கள்  ஆகும். இதை தவிர பல்வேறு திரட்டுக்கள், மனித உரிமை சபையால்  கொண்டுவரப்பட்டது.  இதில்,   இலங்கை இந்தியா போன்ற நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளது.  அதன்படி நடைமுறைப்படுத்தி அதை பற்றிய அறிக்கையை ஒவ்வொரு நாலு வருடத்திற்கு ஒரு தரம் ஐநாவில்  சமர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றது.

பெரியார், பெண்கள் உரிமை, மற்றும் CEDAW

CEDAW என்பது பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாது  ஒழிப்பதற்கான யூனியன்,  அதிகாரங்களை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தம். இது உலகளாவிய பெண்கள் சமத்துவத்திற்காக போராடும் ஒரு சட்டரீதியான அறிவிப்பாகும்.

இதைப் போலவே, பெரியாரும் தனது வாழ்க்கை முழுவதும் பெண்களின் சமத்துவம் குறித்து போராடினார். அவர் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உரிமை, மற்றும் அவர்கள் உடல் உரிமையை வலியுறுத்தினார்.

திருமணத்தில் பெண்களுக்கு சம உரிமை: பெண்களுக்கு தன்னிச்சையான திருமண உரிமை வேண்டும், கணவனுக்கு மட்டும் அல்ல, மனைவிக்கும் சம உரிமை வேண்டும் என்று பெரியார் கூறினார். இது CEDAW-ன் 16-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தோடு ஒத்துப்போகிறது.

பணியிடங்களில் சமத்துவம்: பெண்கள் தமது ஆற்றலால் முன்னேற, அவர்கள் மீது எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது. இது CEDAW-ன் 11-வது பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு உரிமைகளுடன் ஒத்துப்போகிறது.

பெண்களுக்கு கல்விச் சுதந்திரம்: “ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பம் முன்னேறும்” என்று பெரியார் அடிக்கடி சொன்னார். இதுவும் CEDAW-ன் 10-வது பிரிவில் உள்ள பெண்கள் கல்விக்கான உரிமையை பிரதிபலிக்கிறது.

பெண்கள் உடல் உரிமை: பெண்களின் உடல் உரிமை பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பதை ஆழமாக பார்க்க வேண்டி இருக்கின்றது. “ஒரு பெண்ணின் உடல் என்பது அவளுடையது தான்; அதில் எதையும் கட்டுப்படுத்த வேறு யாருக்கும் அதிகாரமில்லை” – பெரியார். இதே கோணத்தில் CEDAW-ன் 12-வது பிரிவில், பெண்களின் உடல்நலம் மற்றும் சுகாதார உரிமை குறித்து பேசப்பட்டுள்ளது.

பெண்கள் தமது உடலை பற்றிய உரிமை கொண்டிருக்க வேண்டும்: பெரியார், “ஒரு பெண்ணின் உடல், அவளுடையதுதான். அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அவளுடைய முடிவு” என்று உறுதியாக கூறினார். இது CEDAW-ல் கூறப்பட்ட பெண்கள் அவர்களது இனப்பெருக்க உரிமைகள் (reproductive rights) மற்றும் உடல்நலம் பற்றிய தன்னிச்சையான முடிவெடுக்கும் உரிமையை பிரதிபலிக்கிறது.

மகப்பேற்று கட்டுப்பாடு, கருக்கலைப்பு உரிமை: பெரியார், “ஒரு பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்கான முடிவை அவள் தான் எடுக்க வேண்டும்” என்றார். இது பெண்கள் கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்று கட்டுப்பாடு உரிமையை பாதுகாக்கும் CEDAW-ன் உரிமைகளுடன் பொருந்துகிறது.

குறித்த வரையறையின்றி மருத்துவ சேவைகள்: பெரியார், “பெண்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள், அவர்களின் சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடாது” என்று கூறினார். இது ICERD-ன் 5-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதாரத்தில் இன பேதங்கள் இல்லை என்பதையும், CEDAW-ல் கூறப்பட்டுள்ள பெண்கள் சமவாய்ப்பு அடையவேண்டும் என்ற கருத்துகளையும் ஒத்துப்போகிறது.

இந்தியா மற்றும் இலங்கை பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பாலினச் சிக்கல்களையும் ஒழிக்கக் கோரிய CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் பல சட்டங்கள் மற்றும் கொள்கைகள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்

இந்தியா:

குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006:

1929ஆம் ஆண்டு குழந்தை திருமணக் கட்டுப்பாட்டு சட்டத்தை மாற்றியமைத்த இது, குழந்தை திருமணங்களை தடுப்பதோடு, அதனை அமலாக்கம் செய்யவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் நடவடிக்கைகள் கொண்டது.

பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டது.

இந்து உரிமை (திருத்தச்) சட்டம், 2005:

இந்து குடும்பங்களில் மகளுக்கும் மகனுக்கும் சம உரிமையை வழங்கும் விதமாக, சொத்து உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

பெண்கள் வேலை நிலையங்களில் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு (தடுக்கல், தடை, வழக்குப்பரிசீலனை) சட்டம், 2013:

பெண்களுக்கு வேலைத் தரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், பணியிடங்களில் பாலியல் தொல்லையை தடுக்கும் சட்டம் அமலாக்கப்பட்டது.

புகார் அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

இலங்கை:

CEDAW ஒப்பந்தத்தில் 1981 அக்டோபர் 5 அன்று இணைந்த இலங்கை, பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் விதமாக பல சட்டங்களை கொண்டு வந்தது.

Domestic Violence Act (2005) – குடும்ப  வன்முறையை தடுக்கும் சட்டம்

சிறப்பான வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியலில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்யும் முயற்சிகள்

பெண்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துதல்

இவ்வாறு, இந்தியா மற்றும் இலங்கை இரண்டும் CEDAWயின் வழிகாட்டுதலின்படி பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் சட்டங்களை கொண்டு வந்துள்ளன.

இலங்கையின் தாய்மார்களுக்கான சுகாதாரப்  கொள்கை சில என்னவென்று பார்ப்போம் அதனால் இலங்கையில் உள்ள சமூகம் மிகப்பெரிய அளவில் பயனடைந்து இருக்கின்றது

இலங்கை, தாய்மை மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்திய விரிவான சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக, குழந்தை இறப்பு வீதத்தை குறைக்க முக்கிய சாதனைகளை அடைந்துள்ளது. இதன் முக்கிய கூறுகளில் ஒன்று, நாடு முழுவதும் அமைக்கப்பட்ட தாய்மை மருத்துவ மையங்கள், அவை கர்ப்பிணிப் பெண்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகின்றன.

முக்கிய அம்சங்கள்:

  1. தாய்மை மருத்துவ மையங்கள்:- Maternity clinics

நாடு முழுவதும் பரவலாக அமைக்கப்பட்ட தாய்மை மருத்துவ மையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் எளிதாக கிடைக்கின்றன. கருவுறுதியின் வளர்ச்சியை கண்காணித்து, சுகாதாரப் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க உதவுகிறது.

  1. ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்கள்:

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதால், இலங்கை அரசு ‘திரிபோஷா’ உணவு ஊட்டச்சத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெற்றுக்கொள்ள உதவப்படுகிறது.

  1. சுகாதாரக் கல்வி மற்றும் ஆலோசனை:

மருத்துவ சேவைகளை மட்டுமின்றி, எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், சமநிலை உணவு முறைகள், பாலூட்டும் முறைகள், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வழிமுறைகள் போன்றவற்றைப் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இது, அவர்களை குழந்தை பிறப்பிற்கும், பிறகு பராமரிப்பிற்கும் சிறப்பாக தயார் செய்ய உதவுகிறது.

  1. சமூக அடிப்படையிலான சுகாதார ஊழியர்கள்:

பொது சுகாதார மிட்வைப் பணியாளர்கள் (Public Health Midwives – PHM) முக்கியமான சேவைகளை வழங்குகின்றனர். வீட்டுக்கு சென்று மறு பார்வை செய்வதோடு, தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தனிப்பட்ட மருத்துவ சேவைகளையும் வழங்குகின்றனர்.

இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்குழந்தை இறப்பு வீதத்தில் ஏற்பட்ட மாற்றம்:

இந்த செயல்முறைகள் குழந்தைகள் உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது. 2018ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையின் குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 9.1 ஆகக் குறைந்துள்ளது. இலங்கை தாய்மை மருத்துவ மையங்கள், ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்கள் மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை ஒருங்கிணைத்தது குழந்தை உயிரிழப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு நேர்மறையான சுகாதார பராமரிப்பு வழங்குவது மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்குவதின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இனவெறி எதிர்ப்பு, மற்றும் ICERD

ICERD என்பது உலகம் முழுவதும் இனவெறி மற்றும் இன அடிப்படையிலான பேதங்களை ஒழிக்க உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும். பெரியார் தனது சமூக சீர்திருத்த இயக்கத்தின் மூலம் இதையே வலியுறுத்தினார்.

ஜாதியையும், இன வேற்றுமையையும் எதிர்த்தார்: “இன, மொழி, மதம், சாதி – எதுவும் மனிதனை மனிதனாக அடையாளம் காண மறுக்கக் கூடாது” என்று பெரியார் கூறினார். இது ICERD-ன் 1-வது மற்றும் 2-வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஒத்துப்போகிறது. அனைத்து இனங்களுக்கும் சம உரிமை: பெரியார், சாதியத்தை எதிர்த்தது மட்டுமின்றி, அனைத்து இனங்களும் சமம் என்பதையும் வலியுறுத்தினார். இது ICERD-ன் 5-வது பிரிவில் கூறப்படும் அனைத்து இனங்களுக்கும் சம உரிமை என்ற கருத்தை பிரதிபலிக்கிறது.

நியாயமான மற்றும் சமத்துவமான உலகம்: பெரியார் சொன்ன “தமிழனாக இருப்பது முக்கியமல்ல, மனிதனாக இருப்பதே முதன்மை” என்ற கருத்து, ICERD-ன் 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள “தொடர்புகளின் அடிப்படையில் ஒப்புமை இல்லாத சமத்துவம்” என்பதுடன் பொருந்துகிறது.

CEDAW மற்றும் ICERD: ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டதும், இந்தியா மற்றும் இலங்கை ஒப்புதல் பெற்றதும் CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்கும் சர்வதேச உடன்படிக்கை)

ஐ.நா. ஏற்றுக்கொண்ட தேதி: 18 டிசம்பர் 1979

சட்டமாக அமலுக்கு வந்த தேதி: 3 செப்டம்பர் 1981

இலங்கை ஒப்புதல் பெற்ற தேதி: 5 அக்டோபர் 1981

இந்தியா ஒப்புதல் பெற்ற தேதி: 9 ஜூலை 1993

ICERD (இன அடிப்படையிலான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்கும் சர்வதேச உடன்படிக்கை)

ஐ.நா. ஏற்றுக்கொண்ட தேதி: 21 டிசம்பர் 1965

சட்டமாக அமலுக்கு வந்த தேதி: 4 ஜனவரி 1969

இலங்கை ஒப்புதல் பெற்ற தேதி: 18 பிப்ரவரி 1982

இந்தியா ஒப்புதல் பெற்ற தேதி: 3 டிசம்பர் 1968

இந்த இரண்டு சர்வதேச ஒப்பந்தங்களும் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டன. பெரியார் வலியுறுத்திய சமத்துவம், பெண்களின் உரிமைகள், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற கொள்கைகள், CEDAW மற்றும் ICERD உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன.

பெரியாரின் கொள்கைகள் உலகத்திற்கும் பொருந்தும்

“மனிதன் மனிதனாக வாழ வேண்டும்; எந்த ஒரு இனத்திற்கோ, பாலினத்திற்கோ, சாதிக்கோ எதிராக வெறுப்பும் தீமையும் இல்லை. சமத்துவம் என்பதே உலகின் உண்மையான நேர் வழி.” – பெரியார்.

இன்று பல நாடுகளில் பெண்களின் உடல் உரிமை மற்றும் சுகாதார உரிமை தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பின்தங்கியவையாகவே உள்ளன. பெரியாரின் கருத்துக்களை உலகளவில் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, ஒரு உண்மையான சமத்துவமான உலகை நாம் உருவாக்க முடியும்.

பெரியாரின் வாழ்நாள் போராட்டங்கள் CEDAW மற்றும் ICERD உட்பட அனைத்துச் சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களின் அடிப்படைக் கருத்துக்களாகவே அமைந்துள்ளன. அவர் கூறியது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, சமூகத்திற்கோ மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே வழிகாட்டும் ஒளியாய் திகழ்கிறது.

கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், பயிற்சியாளர் மற்றும் அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த வள நபர், பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் கட்டுரையாளர், சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டக் கூட்டணியின் ஆசிய கவுன்சில் உறுப்பினர், 

Writer:  Nalini Ratnrajah is a women’s human rights defender, trainer and resource person on un systems and mechanisms, feminist, social activist columnist,

Asian council member of Fighting Inequality Alliance, residing in Sri Lanka.   Email: nalini.fce@gmail.com