நெட்டிசன் பகுதி:
விடுதலை அரசு (Viduthalai Arasu)  அவர்களின் முகநூல் பதிவு:
images
பெரியார் சரியாக குளிக்கமாட்டார்!
பெரியார் விரும்பி அணியும் உடை கைலி!
பெரியார் விரும்பும் உணவு மாட்டுக்கறி!
இந்த மூன்றிலும் ஒரு நுட்பமான அரசியல் ஒளிந்துகிடக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் விடமறுத்த பார்ப்பன உயர்சாதியினர்
அதற்கு கற்பித்த காரணங்களில் ஒன்று
” அவர்கள் சரியாக குளிப்பதில்லை”
இந்த கருத்து கற்றறிந்த தமிழ்க்கடல்மறைமலை அடிகளாரிடமிருந்து, காஞ்சி காமகோடி வரையில் பொது புத்தியாகவே இருக்கிறது.
இப்படிப்பட்டவர்களை பார்த்து பெரியார் கேட்கிறார்;
இந்து மதத்தை பொறுத்தவரை நான் உயர்ஜாதி. ஆனால் நான் தினசரி குளிப்பதில்லை. என்னை எந்த கோவிலிலும்
உன்னுடைய தர்மப்படி தடுக்க முடியாதே?
பொதுக்குளத்தையும், நீராதாரங்களையும் தாழ்த்தப்பட்டமக்கள் பயன்படுத்த முடியாமல்
உயர்ஜாதி என்று தங்களை நினைத்துக்கொண்டிருப்போர் தடைசெய்து வைத்துவிட்டு அவர்கள் குளிக்காததால் கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டமா இல்லையா?
அடுத்து கைலி…
இன்றுவரை கைலி என்பது அடித்தட்டு மக்களின் உடை…
கைலி அணிந்தவருக்கு காவல் துறையினர் தரும் மரியாதையே தனி…
கோவிலுக்குள் கைலி அணியத் தடை!
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முன்பாக அரையாடை அணிந்துசென்ற காந்தியாரை
சிலாகித்து பேசும் அதே சமூகம்தான்
பொது இடத்தில் கைலி அணிபவரைக் கண்டால் முகம் சுழிக்கிறது.
வேட்டியை விட கைலி எல்லாவிதத்திலும் வசதியானது. ஆனால் கைலிக்கு மதச்சாயம் பூசப்பட்டது. பார்ப்பனர்களின் உடைவரிசையில் இன்றுவரை கைலிக்கு இடமில்லை!
பொதுஇடத்தில் பெரியார் கைலியுடனே வலம்வந்தார்.பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர், கவர்னர்ஜெனரல், உள்ளிட்ட ஆகபெரிய பதவிகளை வகித்தவர்களின் முன்பாக கைலி அணிந்தே
சென்றார் பெரியார். கைலி என்பது அவரது உடல்நிலைக்கு மட்டுமல்லாது அவரது உள்ளத்தின் நிலைக்கும் பொருத்தமாகவே இருந்தது.
தீவிர வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியார் தான்மட்டும் மாட்டுக் கறி உண்ணுவதோடு நிற்காமல்,
தன் தொண்டர்களையும் மாட்டுக் கறி உணவிற்கு தயார் படுத்துகிறார்.
நினைத்துப் பாருங்கள்…
இன்றைக்கு சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு
முன்பு கூட்டம் முடிந்தவுடன் பொதுஇடத்தில் மாட்டிறைச்சி விருந்து!
பெரியாரியலை ஏற்ற தொண்டர்கள்
அனைவரும் மாட்டுக் கறி உண்ணுதல்.
இது ஏழைகளின் உணவு, உழைக்கும் மக்களின் உணவு, எங்களின் உணவு.
இதோ… மாட்டிறைச்சி சாப்பிடுகிறோம். என்ன செய்யும் உன் மதம்? என்ற சவாலை வைதீகத்தின் மீது வீசியவர் பெரியார்.
இப்படியான… உடல்தீட்டு, உடைத் தீட்டு, உணவுத் தீட்டு அனைத்திற்கும் எதிர்வினையாக
தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பார்ப்பன வேத இதிகாச புரட்டை உடைப்பதற்கும்,
ஜாதி- மத அடையாளங்களை துடைப்பதற்கும்,
தீட்டு- புனிதம் ஆகிய கற்பிதங்களை நொறுக்குவதற்கும் பயன்படுத்தியவர் பெரியார் ஒருவரே…!