பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில்
சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக் கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ் சாலையில், சென்னை யிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரிய பாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சி யளிக்கிறார். இக்கோவிலில் குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக் கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடி யிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
ஆலய வரலாறு
முற்காலத்தில் ஆந்திரப் பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண் டிருந்தார்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரிய பாளையத்தில் ஒரு வேப்பமரத் தடியில் அவர் ஓய்வெடுத் தார். அதி காலையில் எழுந்து பார்த்தபோது, அவருடைய வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியபோது ஒரு புற்றுக்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரிய பாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக் கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.
மறுநாள் பெரிய பாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப் பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப் பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப் பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.
பிரார்த்தனை
வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், பக்தர்கள் ஆயிரக் கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய் பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள் கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்து கிறார்கள்.