சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சந்தித்து பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நேற்று இரவு ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட, வி.கே சசிகலா மற்றும் அவரது உறவினரும், அமமுக கட்சி தலைவருமான டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூறிய அதிமுக மாவட்டச் செயலாளர் எம். சையதுகான், “அதிமுக பிளவுபட்டுள்ளதால் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம் என்றார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில்,, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைத்து, அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, முன்னாள் முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில், பெரியகுளத்தில் தங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று காலை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், தனது சந்திப்பு கட்சி சம்பந்தமான வழக்கமான சந்திப்பு தான் என்று கூறினார்.