சபரிமலை
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சபரிமலை பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்த நடை சாற்றப்பட்டுள்ளது. மீண்டும் 30 ஆம் தேதி மாலை மகரவிளக்கு விழாவுக்காக கோவில் திறக்கப்படுகிறது. பக்தர்கள் 31 ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
நேற்று கோட்டயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் கே. அனந்தகோபன், “நவம்பர் 15 முதல் டிசம்பர் 3 வரையிலான மண்டல பூஜை காலத்தில் சபரி கோயிலுக்கு ரூ.78.92 வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 10.35 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சென்ற ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயிலுக்கு ரூ.8 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. 2019-ல் கோயிலின் வருமானம் ரூ.156 கோடியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
கேரள மாநில தேவசம்.வாரிய அமைச்சர் கே ராதாகிருஷ்ணன், “சபரிமலைக்கு மகர விளக்கு பூஜைக்காக வரும் பக்தர்களுக்காக எருமேலியில் இருந்து பம்பை செல்லும் பாரம்பரியமான பெரிய பாதை திறந்துவிடப்படும். இந்தப் பாதையில் டிசம்பர் 31-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பெரிய பாதையில் வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.