சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்க கோரி கேட்டு வருகிறார்.

அவரை பரோலில் விட அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி உள்ள நிலையில், பேரறி வாளன் விரைவில் பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ் வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் அற்புதம்மாள், குயில்தாசன் தம்பதிகளின் மகன்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, இதன் காரணமாக ராஜீவ் கொலையில் இவருக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று அந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளே கூறிய நிலையில், மத்தியஅரசு மற்றும் காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக அவரை வெளியே விட கோர்ட்டும், தமிழக அரசும் மறுத்து வருகிறது.

மகனை விடுதலை செய்ய வலியுறுத்தி  பேரறிவாளன் தாயார்  அற்புதம்மாள்  ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த ஜெ.வை சந்தித்து வலியுறுத்தி வந்தார். அவர் மறைந்துவிட்ட நிலையில் தற்போது பல அரசியல் தலைவர்களையும் மகன் விடுதலைக்காக சந்தித்து வரும் அவர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும்  கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

அற்புதம்மாளின் இந்த முயற்சிக்கு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆதரவு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். அப்போது முதல்வர்,  “உங்கள் மகனுக்கு பரோல் வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும், நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள்” என்று கூறி அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பேரறிவாளனுக்கு குறைந்த பட்சமாக முதல்தடவை  10 நாள் பரோல் கிடைக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.