சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 கைதிகளும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவர்களை விடுவிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ராஜீவ்கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அவரது தாயார் அற்புதம்மாளின் வேண்டுகோளை ஏற்று பரோல் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தொடர்ந்து 7வது மாதமாக பரோல் வழங்கி வருகிறது.
முதன்முதலாக தமிழக அரசு மே 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதுமுதல் தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நீட்டிக்கப்பட்ட பரோல், 28ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 7-வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.