அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்
முன்னொரு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர்.
அப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு அவ்விடத்தின் வழியாக வந்தார். அவர் மன்னர்களை அணுகி, சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி, திடீரென ஜோதி வடிவாக மறைந்தார். அந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கிப் பார்த்தபோது அங்கு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தந்தான். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேசுவரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலைமீது ஓர் ஆலயம் கட்டினார்கள் என தல வரலாறு கூறுகிறது.
பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவன், சுயம்புவாக காட்சியளிக்கிறார். ஜோதியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவருக்கு “ஜோதி லிங்கம்” என்றும் பெயருண்டு. பங்குனி மாத்தில் 19,20,21 ஆகிய நாட்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். இவ்வேளையில், சிவனுக்கு விசேட அபிசேகம் நடக்கும். இந்த அபிசேக தீர்த்தத்தை குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டும் பிரசாதமாகத் தருவர். இதைப்பருகிடக் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நோயால் அவதிப்படுபவர்கள், தீய பழக்கங்களுக்கு ஆளானவர்கள் மற்ற நாட்களில் சுவாமியின் அபிசேக தீர்த்தத்தை பருகுகிறார்கள்.
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் அமைந்த கோயில் இது. கோயிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர். குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டபத் தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோட்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜகோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோயிலில் 13 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது. தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை, அட்சய திரிதியையன்று 13 குபேரர்களுக்கும் விசேட அபிசேகத்துடன் பூசை நடக்கும். குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர, தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூசை செய்து வழிபடுகிறார்கள்.
சுவாமிக்கு இடப்புறம் தனிக்கோயில் அமைப்பில் காமாட்சியம்மன் காட்சியளிக்கிறாள். இவளது சன்னதி கோட்டத்தில் மகாலட்சுமி, சரசுவதி இருக்கின்றனர். இவளுக்கு ஆடிப்பூரத்தில் முளைக்கொட்டுத் திருவிழா விசேஷமாக நடக்கும். அன்று அம்பிகை புறப்பாடாகும்போது, பெண்களுக்கு பாசிப்பயிறு பிரசாதம் தருவர். கோயில் முன் மண்டபத்தில் வரகுண கணபதி இருக்கிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நல்ல குணத்தை தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்க இவருக்கு பால் பாயசம் படைத்து, அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தைப்பூசத்தை ஒட்டி இக்கோயிலில் 15 நாள் திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாள் தேரில் வலம் வருவர். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் இருக்கிறார். இவரது சிலை வேல் போன்று, கூர்மையாக வடிக்கப்பட்ட திருவாட்சியின் மத்தியில் இருக்கும் படி வடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பழமையான சிவாலயம் இது. 100 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ராஜகோபுரம் உள்ளது. சுற்று வட்டாரத்தில் 10 மைல் தொலைவிலிருந்து நோக்கும் போதும் இவ்வாலயத்தின் எழில் மிகு ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
ஸ்தபன மண்டபத்தின் வடபுற துவாரபாலகர் உள்ள தூணின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில் ஒரே தலையைக் கொண்டு எதில் எதிராக யானை உருவமும், காளை உருவமும் ஆக இரண்டு காட்சிகளாகத் தோற்றமளிக்கும் அற்புத சிற்பம் காணப்படுகிறது. உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிருந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன.
இக்கோயில் அருகிலுள்ள குன்றில் முருகன், கையில் கரும்புடன் காட்சியளிக்கிறார். இவரது சன்னதி ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்தபடி மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவர், கன்னிமூலகணபதி, காசி விஸ்வநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.
உட்பிரகார மண்டபத்தின் கன்னி மூலையில் வரகுணகணபதி அருகில் ஐந்து தலை நாகருடன் காட்சி தருகிறார். மேற்கு பிரகாரத்தில் மேற்கு புற மண்பத்தில் விநாயகர் சந்நிதியும் வேல்வடிவ திருவாச்சியுடன் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் அருகில் வள்ளி தெய்வானையுடன் தனி சந்நிதியில் அற்புத வடிவமாகக் காட்சி தருகிறார்.
திருவிழா:
சிவனும், அம்பிகையும் இணைந்து நடனமாடிய நாள் தைப்பூசம். தைப்பூசம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம். இதுவே இத்தலத்தின் பெருந்திருவிழா ஆகும். கொடி ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிறப்பு அபிசேக அலங்காரத்துடன் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. இதில் ஒன்பதாம் நாளன்று பஞ்சமூர்த்திகள் ஒரு தேரிலும் அம்பாள் ஒரு தேரிலும் ஆக இரண்டு தேர்களில் கொலுவீற்றிருக்க செட்டிகுளம் ரத வீதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி நவராத்திரி விழா, சூரசம்காரம், தீபாவளி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், திருவாதிரை, சிவராத்திரி, சித்திர பவுர்ணமி ஆகியன இத்தலத்தில் விசேச நாட்களாகும். மாதாந்திர பிரதோச தினங்கள் இங்கு விசேசமாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரார்த்தனை :
இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்குவோர்க்கு செல்வம் கொழிக்கும் வாழ்வு கிட்டும் என்பதால் பெருமளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இத்தலத்து ஈசனை வணங்குவோர்க்கு நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற்போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியன நீங்குவதால் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகின்றது. இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு மன அமைதி கிட்டும் என்பது முக்கியமான அம்சம்.
நேர்த்திக்கடன் :
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவிக்கலாம். சுவாமிக்கு பால், தயில், எலுமிச்சை, சந்தனம், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்