அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதற்காக திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு அந்நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பல்வேறு நொறுக்குத் தீனிகளை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

மணப்பாறை ‘முருக்கு’ தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிலையில் அங்கு உலகின் முன்னணி நிறுவனமான PepsiCo தனது ஸ்னாக்ஸ் தொழிற்சாலையை அமைக்க இருப்பதை அடுத்து தமிழக அரசு இந்த இடத்தை ஒரு பெரிய உணவு பூங்காவாக மேம்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

பெப்சிகோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில், அசாமில் ₹778 கோடி முதலீட்டில் ஒரு ஆலையை அமைப்பதாக அறிவித்தது. இது 2025 அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

அதேபோல் உத்தரபிரதேசத்தில் அதன் மிகப்பெரிய பசுமை உணவு ஆலை ஒன்றை அமைப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் தனது உற்பத்தி திறனை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PepsiCo போன்று மின்னணு உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான JABIL நிறுவனமும் மணப்பாறையில் தனது மின்னணு உற்பத்தி வசதியை நிறுவ திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள், சிஸ்கோ மற்றும் ஹெச்பி போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுக்கு 35 பில்லியன் டாலர் முக்கிய சப்ளையரான ஜேபில், ₹2,000 கோடி முதலீட்டில் 5,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செப்டம்பர் 2024 இல் தமிழக அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.