சென்னை: மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து விட்டது என மின்தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்பட்டு வருவதாக மாநில அரசு கூறி வருகிறது. இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்தடைக்கு அணில் காரணம் என அளந்துவிட்டு, பொதுமக்களிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், அந்த தொகுதி எம்எல்ஏவும், மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மாசு, தமிழ்நாடு மின் வாரியம் வாங்கியுள்ள 1லட்சத்து59ஆயிரம் கோடி கடனுக்காக 9.6 சதவீதம் வட்டி செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், இதனை கடனை குறைத்து 2000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடந்த ஆட்சியில் அதிகமான தொகையை செலவழித்து மின்சாரம் வாங்கியுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரைமணி நேரம் மின் விநியோகம் நின்று விட்டாலும் மின் பணியாளர்களுக்கு போன் செய்து தொல்லை கொடுக்கின்றனர், மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது என்று ஆதங்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின் கணக்கீட்டில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், மின் கட்டண குளறுபடி குறித்து பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. உரிய ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்.