அமராவதி:

ந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று மாநில ஜெகன் அரசு அறிவித்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான முடிவை  ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், முதல்வர் ஜெகன்,  சந்திரபாபு நாயுடு அரசின்  பல்வேறு திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறார். அதையடுத்து, அமராவதியை உருவாக்கும் திட்டமும் மாற்றி அமைக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன்  அறிவித்தார். அதன்படி,  அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூல் சட்டத் தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) விளங்கும் என்று அறிவித்தார்.

ஆனால், ஜெகன்மோகன் அரசின் இந்த திட்டம் மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கியது. ஏற்கனவே அமராவதிக்காக நிலம் கொடுத்த பல விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர். மேலும் மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், தற்போது 3 தலைநகரங்கள் அமைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஆந்திர அரசு அறிவித்து உள்ளது. மூன்று தலைநகரங்கள் திட்டத்தை அமல்படுத்த உயர்மட்டக்குழு அமைக்க உள்ளதாகவும், அந்த குழுவினரின் அறிக்கைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.